Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, May 17, 2011

ஈழத்துச் சதன்

6 comments

mic_on_stage_op_710x476

சிறுவயதில் ஒருநாள் அம்மாவுடன் இருந்து வானொலி கேட்பதற்காய் வானொலியைத் திருகியபோதுதான் ஈழத்துச்சதன் முதன்முதலாய் எனக்கு அறிமுகமானார். விதம்விதமான குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க அது என்ன என்ற எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க பெரும்பாடுபட்டார் அம்மா. இந்தியத் தொலைக்காட்சிகள் எதுவுமே அறிமுகமாகியில்லாத காலத்தில் ‘மிமிக்ரி’ என்ற சொல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லையாயினும், மிமிக்ரி என்றால் என்ன என்பது அன்று எனக்குப் புரிந்துபோனது. அவரது விளக்கத்தில் இருந்த ஈழத்துச்சதன் என்ற பெயரும் அதன் வித்தியாசத்தன்மை காரணமாக மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டது.

அதன்பிறகு அவரது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குக்கூட சந்தர்ப்பங்கள் ஏதோ அதிஷ்டத்தில்தான் அமைந்தாலும் அவரது நிகழ்ச்சியை முதன்முதலில் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்தது. பாடசாலையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவரது நிகழ்ச்சிக்கு ஐந்து ரூபா டிக்கெட் எடுத்து அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன் வரிசைகளில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அவரது உருவம் என ஒன்றை மனதில் கற்பனை செய்துகொண்டு காத்திருந்தபோது அங்கே வந்த குள்ளமான அந்த மனிதரை “’இவர்தான் ஈழத்துச்சதன்” என்று அருகிலிருந்து ஏமாற்றமளித்தான் அவரை ஏற்கனவே அறிமுகமான நண்பன் ஒருவன்.

பறவைகள், விலங்குகள் என்று பலவற்றையும் தனது வாய்மொழியால் மட்டுமல்ல, உடல்மொழியாலும் அன்று கண்முன் கொண்டுவந்திருந்தார் ஈழத்துச்சதன். அங்குமிங்கும் தாவி குரங்குச்சேட்டைகளை நிகழ்ச்சினார். அங்கு குரங்குகள் பேன் பார்த்தன. யானைகள் பிளிறின. காட்டு விலங்குகள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டன. எங்கள் ஆண்கள் பாடசாலையில்கூடப் பெண்கள் ஒன்றுகூடிச் சிரித்துக்கொண்டார்கள். சனிக்கிழமைகளில் எள்ளுச்சாதம் வைத்துவிட்டுக் காட்டுக்கத்தல் கத்தினாலும் எட்டிக்கூடப் பார்க்காத காகங்கள் எல்லாம் அவரது ‘கா கா’ என்ற குரலுக்கு நூற்றுக்கணக்கில் மண்டபத்தை முற்றுகையிட்டுக்கொண்டன. இத்தனைக்கும் அவர் கையில் ஒலிவாங்கி என்பதே கிடையாது. அது அவருக்குத் தேவையும் கிடையாது.

அவர் அன்று நிகழ்த்தியவைகளுள் எனக்கு இன்னும் மறக்காமல் இருப்பது மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள். ஒருவகையில் எமது அடையாளமாகவே பார்க்கப்பட்ட ஒன்று. போச்சியால் சிறிது தினரை ஊற்றி வாயால் ஊதிவிட்டு சொக்கை இழுத்து கிக்கரை சிலமுறை உதைந்துப் ‘இஞ்சின் பிடிக்காமல்’ போகவே மீண்டும் போச்சி- தினர்- கிக்கர், இம்முறை படபடவென பெரிய சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகி ஒருமுறை சுற்றிவர மண்டபம் முழுவதும் கரும் புகை நிரம்பி கைதட்டலில் கரைந்தது.

ஈழத்துச்சதன் எம்முடனேயே வாழ்ந்த ஒரு அற்புதமான கலைஞன். எமக்கு அன்றிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களாலும் வானொலி நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டு பெரிதாகக் கவனிக்கப்படாமலேயே கடந்துபோனவர். இன்று தொலைக்காட்சிகளில் அசத்திக்கொண்டும், கலக்கிக்கொண்டும், சிலவேளைகளில் கடுப்பேற்றிக்கொண்டும் இருக்கும் கலைஞர்களைப் பார்க்கும்போது ஈழத்துச்சதனின் ஞாபகமும் வந்துபோகும்.

எவ்வளவு தேடியும் ஈழத்துச்சதனின் புகைப்படம் ஒன்றுகூட இணையத்தில் தட்டுப்படவில்லை. இணையத்தில் ஏறும் எல்லாமே நிரந்தரம் என்றார் சுஜாதா. அந்த நிரந்தரத்தன்மை ஈழத்துச்சதனுக்கு எழுத்தில் மட்டும்தான் வாய்த்திருக்கிறது போலும்.

ஈழத்துச்சதன் – வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட (பிர)தேசத்தில் வாழ்த்து, இப்போதும் எம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதமான கலைஞன்.

- ஈழத்துமுற்றத்திற்காக எழுதியது-

Tuesday, June 29, 2010

கொழும்பு விலை

9 comments

 

“என்ன அன்டி, கையில பாக்கையும் காவிக்கொண்டு வந்திருக்கிறியள்? என்ன விசயம்?”

“ஒண்டுமில்லை, சண்முகமண்ணேன்ட கடையில நல்ல வெள்ளைச் சீனி வந்திருக்கு. கொழும்பு விலையைவிட கிலோ இருவது ரூவாதான் கூடவாம். அதுதான் வேணுமெண்டா வாங்கிவையுங்கோவெண்டு சொல்லிட்டுப் போக வந்தனான்”

எந்த ஒரு பொருளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைதான் இந்தக் கொழும்புவிலை. என்னதான் அதிகபட்ச விலை என்றாலும், தரைவழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல கட்டுப்பாடுகளுக்கும் தடைகளுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த கடல்வழிப் போக்குவரத்தாலும் இந்த விலை எங்களுக்கு எப்படியும் குறைந்தபட்ச விலையிலும் குறைவாகத்தான் இருக்கும்.

ஊர்க்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சமயங்களில் கொழும்பு விலையின் இரண்டு, மூன்று மடங்கைவிட அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களும் இங்கே சகஜம். இந்த விலை அதிகரிப்பை பொருளின் தேவை, கடல்மார்க்கத்தில் எடுத்துவர ஆகும் செலவு, யுத்த சூழ்நிலை முதற்கொண்டு கடையில் இருக்கும் பதுக்கல் வரை தீர்மானிக்கும்.

19_11_06_jaffna_01
இந்தக் கொழும்புவிலை என்பது பல ஆண்டுகாலப் பாவனையால் நம்மவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது. எந்தப் பொருளையும் அதன் கொழும்புவிலையுடன் ஒப்பிடுவதும், அதுகுறித்து அடுத்தவருடன் பேசிக்கொள்வதும், அதேபோல கொழும்புக்கு வருபவர்கள் குறைந்தவிலையால் தேவைக்கு அதிகமாக வாங்க விரும்புவதும் எம்மவரிடையே இயல்பான ஒன்று.

இந்த விலைவித்தியாசத்தால், கொழும்பிலிருந்து ஊருக்குப் பயணப்படும் ஒவ்வொருவரும் தமது சக்திக்கும் அப்பாற்பட்ட பொருட்களை தம்முடன் எடுத்துச்செல்வார்கள். மாரளவு தண்ணீரில், தலையில் பொருட்களைச் சுமந்துசென்றும், படகிலும், பின் முன்னாலும் பின்னாலும் பலகை அடித்த மண்ணெய் மோட்டார்சைக்கிளிலும் கொம்படி ஊரியான் பாதையில் பயணித்து, வீடு வந்து சேர்கையில் பொருட்கள் தமது உண்மையான தன்மையையே பல நேரங்களில் இழந்துவிட்டிருந்தாலும், கொழும்பிலிருந்து வந்தால் இப்படியாக பொருட்கள் காவிவருவதும், அதை உறவினர், அயலவருடன் பகிர்வதும் ஏறத்தாள எழுதப்படாத சட்டம்போன்றது.

பல ஆண்டுகளாக நம் பாவனையில் இருந்து இந்தக் கொழும்புவிலை நம் வட்டாரச் சொற்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. தரைவழிப் போக்குவரத்துகள் சீர்செய்யப்பட்டு, விலை வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்ட இன்றும்கூட,
“மச்சான் பைக் ஒண்டு பாத்திருக்கன், இங்கை 1.60 சொல்லுறாங்கள். அங்க எவ்வளவு போகுதெண்டு ஒருக்காப் பாத்துச் சொல்லுறியா”
என்ற நண்பனின் அழைப்பிலும், ஆப்பிள்களை பைக்குள் அடைந்துகொண்டு யாழ் செல்லும் ஆச்சிகளிலும், “கொழும்பு விலையில்…” என்று ஆரம்பிக்கும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகை விளம்பரங்களிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது இந்தக் கொழும்பு விலை.

பி.கு :- ஈழத்துமுற்றத்துக்காக எழுதப்பட்டது.

Monday, May 3, 2010

சுஜாதா !!!

17 comments

 

writer_sujatha_bday

 

சுஜாதா – அறிமுகமே தேவையில்லாத ஒரு ஆளுமை. அவரின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் சரி, இன்றய பதிவர்களும் சரி, அவரின் பாதிப்பு இல்லாமல் எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவிற்கு தனது மேலோட்டமான எழுத்துக்களால் வாசகர்களை ஆழமாகப் பாதித்தவர் சுஜாதா.

சுஜாதாவின் எழுத்துக்களில் தேவையற்ற விபரிப்புகள் இருக்காது. ஒரு நகைச்சுவை இருக்கும். விபரிக்கும் சூழலை உள்வாங்கி, அதற்கேயுரிய மொழிநடையில் ஆழமான கருத்துக்களையும் மிக இலகுவாகச் சொல்லிச்செல்வதில் அவருக்கு நிகர் அவரேதான். இலகுவான இந்த நடைதான் அவரை தமிழில் அதிகம் படிக்கப்படும் எழுத்தாளராக மாற்றியது மட்டுமல்ல, அவரது படைப்புக்களை ஒருதடவை படிப்பவர்கள் மேலும் தேடித்தேடிப் படிக்கவும் வைத்தது.

சுஜாதா ஒரு எழுத்தாளர் மாத்திரமல்ல, பல எழுத்தாளர்களை உருவாக்கியவர். அவரது காலம்வரை இருந்துவந்த எழுத்துநடையை இலகுவாக்கி, எழுத்துகளில் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை அதிகமாக இடம்பெறச்செய்த அவரது முயற்சிதான், அவரை வாசிப்பவர்களிடமும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. இன்றய தமிழ்ப் பதிவுலகமும், அதன் அதிகப்படியான பரம்பலும் சுஜாதாவின் இந்த மாற்றத்தின் விளைவுதான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சுஜாதா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரா என்ற எண்ணமும் கூட வருகிறது அவர் 60, 70 களில் எழுதிய கணையாளியின் கடைசிப்பக்கங்களில் அவர் குறிப்பிட்டிருக்கும் சினிமா பற்றிய எதிர்வுகூறல்களும் சரி, பல இடங்களில் குறிப்பிட்ட அறிவியல், தொழில்நுட்ப எதிர்வுகூறல்களும்சரி பல இன்று உண்மைகளாகியிருக்கின்றதை, உண்மைகளாகிவருவதைப் பார்க்கின்றபோது.

சிறுகதைஉலகில் இவரது பணி அளப்பரியது. கணேஷ், வசந்த் என்ற இரு கதாபாத்திரங்களை உருவாக்கி, வாசகர்கள் மனதில் உண்மையான கதாபாத்திரங்களாகவே நடமாடவைத்தவர். ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் மூலம், நான் முன்பின் பார்த்திராத ஒரு ஊரையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர். கதைமாந்தர்களின் இலகுவான உரையாடல்மூலம் கதையை நகர்த்திச்செல்லும் இவரது பாணி, வாசகர்களை இலகுவில் கதையோடு ஒன்றச்செய்துவிடும்.

சினிமாவான இவரது படைப்புகள், வாசிப்பில் ஏற்படுத்திய தாக்கத்தை திரையில் ஏற்படுத்தத் தவறியிருந்தாலும்கூட, இவர் வசனமெழுதி வெளிவந்த படங்களின்மூலம் சினிமாவிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

பல்வேறு காரணங்களுக்காக சிலர் இவரது படைப்புக்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், இவர்வசமுள்ள பெரிய வாசகர் கூட்டமும், அவர்களில் இவர் ஏற்படுத்திய தாக்கமும் தமிழ் எழுத்துலகில் இருந்துகொண்டுதான் இருக்கும்.

பி.கு – மறைந்தும் மறையாமல் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எழுத்தாளர் சுஜாதாவுக்கு இன்று (03/05/2010) 75 ஆவது பிறந்தநாள்.

Monday, December 7, 2009

கடவுளாக்கப்பட்ட கயவர்கள்

70 comments



பகுத்தறிவு வளர்கின்றது, மூடநம்பிக்கை அகல்கின்றது என்று என்னதான் வாய்கிழியக் கத்தினாலும் உண்மையில் நடப்பதெல்லாமே நேர்மாறுதானா என்று எண்ணத்தோன்றுகிறது.

சமீபத்தில் தொலைக்காட்சியொன்றில் ஒரு குப்பைத்தொட்டிக்கு பட்டுக்கட்டி, பூச்சூடி அதை மங்களகரமாக மாற்றிவைக்க பலரும் அதை கும்பிட்டுவிட்டுப் போவதாகக் காட்டினார்களாம். இப்படிக் கண்டதையும் கடவுளாக்கி வணங்கும் மூடநம்பிக்கைகள் மற்ற மனிதர்களை கடவுளாக்கி, கோயில்கட்டிக் கும்பிடும் நிலையையும் தாண்டி நிற்கின்றது.

பல காலமாகவே தம்மை அவதாரம், கடவுள் எனக் கூறி அடுத்தவர்களை ஏமாற்றும் கூட்டம் இருந்துகொண்டே இருந்தாலும், அது பெரும்பாலும் அந்த ஊரோடு, அல்லது கிராமத்தோடே மட்டுப்படுத்தப்பட்டுவிடும். இந்த நிலமை இன்று மோசமாகி பல நாடுகளிலும் கிளை தொடங்கி சம்பாதிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. இவர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதற்கும் ஒவ்வொரு ஊரிலும் கையூட்டுப் பெற்ற ஒரு கூட்டம், இவர்களின் பயப்பு வார்த்தைகளுக்கு மயங்கிச் செல்லும் கூட்டத்தை அப்படியே வளைத்துப்போட நன்கு பயிற்றப்பட்ட இன்னுமொரு கூட்டம் என்று இந்தக் கடவுள் வியாபாரத்துக்குப்பின்னால் ஒரு பெரிய வலைப்பின்னலே இயங்குகிறது.

இப்படியானோரின் பிரார்த்தனைகளின் ஆரம்பத்தில் கண்டிப்பாக ஒரு தியானம் இருக்கும். எப்படிப்பட்ட மனதையும் தியானம் ஒருநிலைப்படுத்திவிடும் என்பது விஞ்ஞானம். மனம் ஒருநிலைப்பட்டு அமைதியடைந்தவுடனேயே பலர் இவர்களைக் கடவுளாக நம்பத்தொடங்கிவிடுவார்கள். அதன்பிறகு காண்பிக்கப்படுபவை எல்லாம் மேஜிக். கண்கட்டுவித்தை. இவற்றையெல்லாம் நம்பி, இவர்களுக்கு பணத்தை வாரி இறைப்பவர்களால் இன்று கோடிகளில் குளித்துக்கொண்டிருக்கிறார்கள் இந்தக் கடவுள்கள்.

பார்ப்பதற்கு ஒரு கட்டணம், பேசுவதற்கு இன்னுமொரு கட்டணம் என அறவிடும் இந்தக் கயவர்கள், அவற்றை முதலிடுவதற்கு பிள்ளைகளின் பெயரிலும், பினாமிகளின் பெயரிலும் பல கல்லூரிகள், கட்டுமானக் கம்பனிகள் என வைத்து அரசாங்கங்களையும் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

இன்றய மனிதனுக்கு எதிலும் அவசரம். கோயில்களுக்குச் சென்று கடவுளை வளிபடுவது ஒருவழித் தொடர்பாடல். பதிலும் கிடைக்காது, நடக்குமா என்பதும் தெரியாது. பதிலாக இப்படியானவர்களின் சாந்தமான பேச்சும் நடத்தையும், பதிலும் மனதுக்கு நம்பிக்கையாக இருப்பதால்தான் இப்படியானவர்களுக்கும் கூட்டம் கூடுகிறது. இது மட்டுமா? மற்றவர்களைக் குறுக்கு வழியில் வீழ்த்துவதற்கு மனிதன் கையாளும் மார்க்கம்தான் மாந்திரீகம். இப்படி மனிதர்களுக்குள் வளரும் போட்டிகளால்தான் மனிதக் கடவுள்களும் வளர்க்கப்படுகிறார்கள்.

எனவே மனிதர்களுக்கு மனிதர் மரியாதை செய்யுங்கள், விட்டு அவர்களை வணங்காதீர்கள். தெய்வம் மானுஷ்ய ரூபே என்பது உதவிக்குத்தான் என்பதைத்தவிர்த்து, உங்களிடம் இருப்பதைப் பிடுங்குவதற்காக அல்ல.

இறுதியாக ஒன்று. எனக்கு இந்த மேஜிக் செய்பவர்களைக்கண்டால் தொன்றுவது, இப்படி மேடைக்கு மேடை மேஜிக் செய்வதை விட்டுவிட்டு பேசாமல் கடவுளாகியிருக்கலாம். ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுவதை விடுத்து கோடிகளில் கூடிவாழ்ந்திருக்கலாமே.


Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy