இலங்கை – மேற்கிந்திய தீவுகள் A ஒரு நாள் தொடர் சமநிலையில் நிறைவு

478
Sri lanka cricket A v west indies A

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான மூன்றாவதும் கடைசியுமான உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டியில் குறைந்த வெற்றி இலக்கை எட்டத் தவறிய இலங்கை A அணி 45 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

இந்த தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில்,  இந்த தோல்வியின்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் 1-1 என சமநிலையடைந்துள்ளது.

ஜமைக்காவின் டிரலவ்னி மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று இரவு (05) ஆரம்பமான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் A அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

எனினும் இலங்கை A அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் விமுக்தி பெரேரா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த மேற்கிந்திய தீவுகள் அணி 93 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சுனில் அம்ப்ரிஸ் 20 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற்று ரன் அவுட் ஆனார்.

அடுத்து வந்த அன்ட்ரே மக்கர்தி விக்கெட்டை காத்துக்கொண்டு 40 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றபோதும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார அவரை வெளியேற்றினார்

இந்நிலையில் கடைசி வரிசையில் வந்த எந்த வீரரும் நின்றுபிடித்து ஆடாத நிலையில் மேற்கிந்திய தீவுகள் A அணி 44.1 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கே சுருண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அணித் தலைவர் ஷமர் ப்ரூக் முன்வரிசையில் பெற்ற 35 ஓட்டங்களே அதிகபட்சமாகும்.

இலங்கை A அணி சார்பில் விமுக்தி பெரேரா 9.1 ஓவர்களில் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். லஹிரு குமார மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆரம்ப வீரர் சதுன் வீரக்கொடி 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு அடுத்து வந்த ரொஷேன் சில்வா (03) மற்றும் அணித் தலைவர் தனன்ஜய டி சில்வா (03) வந்த வேகத்தில் அரங்கு திரும்பினர். பின்னர் வந்த சரித் அசலங்க (10) மற்றும் வினின்து ஹசரங்க (0) அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க இலங்கை தரப்பு 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் ஆரம்ப வீரர் நிபுன் கருனநாயக்க ஒருமுனையில் நின்றுபிடித்து ஆடினார். ஆனால் மறுமுனை விக்கெட்டுகள் தொடர்ச்சியாக பறிபோனதால் இலங்கை அணியின் வெற்றி எதிர்பார்ப்பு சிதறியது. கடைசியில் நிபுன் கருனநாயக்கவும் 113 பந்துகளில் 2 பௌண்டரிகளுடன் 47 ஓட்டங்களை எடுத்த நிலையில் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இதனால் 153 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை A அணி 38.3 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கே சுருண்டது. மேற்கிந்திய தீவுகள் A அணியின் வலுவான மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்ததோடு மிதவேகப்பந்து வீச்சாளர் கையில் மேயர்ஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரஹ்கீன் கோர்ன்வோல் முறையே 3, 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் கொட்டரஸ் இலங்கை அணியின் ஆரம்ப வரிசையை சாய்த்து தான் வீசிய 8.3 ஓவர்களிலும் 19 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதன்மூலம் அவர் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

எவ்வாறாயினும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை A அணி மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.  

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் A – 152 (44.1) – ஷமர் ப்ரூக்ஸ் 35, அன்ட்ரே மக்கர்தி 27, சுனில் அம்ப்ரிஸ் 20, விமுக்தி பெரேரா 25/4, லஹிரு குமார 30/2, தசுன் ஷானக்க 35/2

இலங்கை A – 107 (38.3) – நிபுன் கருனநாயக்க 47, ஷெல்டன் கொட்ரெல் 19/4, கைல் மேயர்ஸ் 24/3, ரஹ்கீன் கோர்ன்வோல் 23/2

முடிவு மேற்கிந்திய தீவுகள் A அணி 45 ஓட்டங்களால் வெற்றி