Published : 18 Dec 2017 09:49 PM
Last Updated : 18 Dec 2017 09:49 PM

3 மாதத்தில் திமுக ஆட்சி அமையும்; ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி: ஸ்டாலின்

3 மாதத்தில் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வரப் போகிறது. திமுக ஆட்சி வந்ததும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் உரிய வகையில் தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.

அரி நாராயணபுரம் பெருமாள் கோயில் அருகிலும், பாரதியார் நகர் பிரதான சாலை, காமராஜர் பிரதான சாலை என பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து ஸ்டாலின் பேசியதாவது:

''இந்த இடைத்தேர்தல் எந்தச் சூழ்நிலையில் வந்துள்ளது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். முதல்வர் ஜெயலலிதா மறைவெய்திய காரணத்தால் இந்த இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம். ஆனால் அவரின் மறைவில் இருக்கும் மர்மம் என்ன? அவர் இயற்கையாக மறைந்தாரா? அல்லது செயற்கையாக மறைந்தாரா? என்ற கேள்விக்குறி எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதனால்தான் இப்போது அதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தார். அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நலம் பற்றி அவர் எப்படி இருக்கிறார்? எந்த நிலையில் இருக்கிறார் என அதிமுகவைச் சார்ந்தவர்கள் சொன்னார்களே தவிர, சொல்ல வேண்டிய அரசாங்கம் சொன்னதா? அரசாங்கம் என்பது அரசாங்கத்தை வழிநடத்திய முதல்வர் பொறுப்புகளை கவனித்து வந்த பன்னீர்செல்வம் சொல்லியிருக்க வேண்டும், இல்லையென்று சொன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லியிருக்க வேண்டும், அப்படியும் இல்லையென்று சொன்னால் தலைமைச் செயலாளர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

ஆனால் அதிமுகவைச் சேர்ந்த சிலர் வெளியில் வந்து, ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்கள், சட்னி சாப்பிட்டார்கள், உடற்பயிற்சி செய்தார்கள், இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் வீடு திரும்புவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா எங்களுடைய அப்போலோ மருத்துவமனையில் வந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நினைவிழந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் தான் அனுமதிக்கப்பட்டார் என்று சொல்லியுள்ளார். நான் கேட்க விரும்புவது, ஒரு முதல்வரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாத நிலையில் ஒரு முதல்வர் இருந்திருக்கிறார்.

ஜெயலலிதா உயிரோடு, நலமோடு வந்திருந்தால் உள்ளபடியே மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆனால், என்ன நடந்தது என்று ஒரு உண்மை கூட வெளியாகவில்லை. இதே ஓபிஎஸ் அன்றைக்கு தாடியோடு மருத்துவமனையில் இருந்தார். அவருக்குப் பக்கத்திலேயே எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்திருந்தார். ஆனால், யாருமே வாய் திறந்து பேசவில்லை.

3 மாதத்தில் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வரப்போகிறது. திமுக ஆட்சி வந்ததும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் உரிய வகையில் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபட சொல்லிக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x