கிரிக்கெட் உலகிற்கு மோசமான நடத்தைகளை வெளிக்காட்டிய பங்களாதஷ் வீரர்கள்

6249

கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்பதை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் நேற்று கொழும்பில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு டி20 போட்டி, தெரு கிரிக்கெட் போன்ற காட்சிகள் சர்வ சகஜமாக நடந்தேறியதுடன், கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகப் பெரிய கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டது. அத்தோடு பிரேமதாஸ மைதானத்தில் உள்ள பங்களாதேஷ் அணியின் ஓய்வறைக் கண்ணாடிக் கதவு உடைந்து நொறுங்கிய நிலையிலான புகைப்படமும் தற்போது விவகாரத்தை மேலும் பிரச்சினைக்குள்ளாக்கியுள்ளது.

[rev_slider LOLC]

நோ-போல் சர்ச்சை பெரிதாகி வீரர்களுக்குள் மோதலாகி பிறகு வெற்றி பெற்றவுடன் பாம்பு நடனமாடி, குசல் மெண்டிஸ் அதனைக் கண்டு கொதிப்பாகியது போக தற்போது வங்கதேச வீரர்கள் அல்லது வீரர்தான் ஓய்வறைக் கண்ணாடிக் கதவை உடைத்தனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (16) இடம்பெற்ற தீர்மானமிக்க டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில் சர்ச்சைகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியின் இறுதி ஓவரில் பங்களாதேஷ் வீரர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

சுதந்திர கிண்ண டி20 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ்

இலங்கையுடனான சுதந்திர கிண்ண டி20 முத்தரப்பு தொடரின் பரபரப்பான…

இதன்படி, போட்டியின் மத்தியஸ்தராக கடமையாற்றிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ் ப்ரோட் துப்பறியும் நிபுணராகி CCTV பதிவுகளை பார்வையிட்டுள்ளார். இதில் குறித்த அறையில் இருந்த பணியாளர் ஒருவர் இதற்குக் காரணமான வீரரின் பெயரை போட்டி மத்தியஸ்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் 3ஆவது தரப்பினர் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள போட்டி மத்தியஸ்தர் மறுத்துள்ளார்.

இதனையடுத்து CCTV பதிவுகளை ஆராய்ந்து அறிக்கையொன்றை இன்று மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்பிக்குமாறும் மைதான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, மைதான அதிகாரிகளால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், CCTV காணொளியில் வீரர்களின் ஓய்வறைய சேதப்படுத்தியது தொடர்பில் எந்தவொரு காட்சிகளும் பதிவாகவில்லை எனவும், அதற்கு முன்னரே CCTV கெமரா சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

நேற்றைய இறுதி ஓவரில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றிபெற 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இலங்கை அணிசார்பில் பந்து வீசிய இசுறு உதான முதல் இரண்டு பந்துகளையும் பவுன்சர் பந்தாக வீசினார். இரண்டாவது பந்தும் அதே மாதிரி செல்ல நடுவர் உயரமாகச் சென்றதற்கான நோ-போல் கொடுக்கவில்லை. ஆடுகளத்தில் இருந்த மஹ்மதுல்லா நடுவர்களிடம் நோ-போல் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதனால் கொதிப்படைந்த அணித்தலைவர் சகிப் அல் ஹசன் நிலைமையை சமாதானம் செய்யாமல் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல நான்காவது நடுவரிடம் மோசமான முறையில் வாக்குவாதம் செய்தார். இதனால் போட்டி சற்று தாமதமாகியிருந்தது.

இதன்போது மைதானத்தின் எல்லைக்கோட்டுக்கு அருகில் வந்த பங்களாதேஷ அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் துடுப்பாட்ட வீரர்களை போட்டியின் இடையே மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.

அப்படி செய்திருந்தால் அது ஆட்டத்தைக் கைவிட்டதாகக் கருதப்பட்டு இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் பங்களாதேஷ் அணியின் முகாமையாளர் காலித் மஹ்மூத், மஹ்முதுல்லாவிடம் போட்டியை முடித்து விட்டு வருமாறு சைகை செய்ய போட்டி மீண்டும் ஆரம்பமாகியது.

மறுபுறத்தில் மஹ்மதுல்லா நடுவர்களிடம் நோ-போலுக்காக வாதிட்டுக் கொண்டிருந்த போது வங்கதேச உதிரி வீரர் குளிர்பானத்துடன் களத்துக்குள் வந்தார், அவர் வேண்டுமென்றே இலங்கை அணியின் தலைவர் திஸர பெரேராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்போது இலங்கை வீரர்கள் அந்த உதிரி வீரரை மைதானத்திலிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

எனினும் இந்த பிரச்சினைகள் முடிய, பங்களாதேஷ் அணி 5ஆவது பந்தில் மஹமதுல்லாவின் சிக்ஸருடன் வெற்றிபெற்றது.

இத்தோடு முடிந்ததா? மஹ்மதுல்லா வென்றவுடன் வங்கதேச வீரர்கள் மைதானத்துக்கு நடுவே ஓடிவந்து குழுமி அதே பாம்பு நடனத்தை ஆவேசமான முறையில் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து இலங்கை வீரர்கள் அமைதியான முறையில் மைதானத்தை விட்டுச் செல்லும் போது குசல் மெண்டிஸை வங்கதேச வீரரொருவர் வம்புக்கு இழுக்க, அங்கும் பதற்றம் ஏற்பட்டது. இதன்போது குசல் மெண்டிஸ் குறித்த வீரரை நோக்கி கோபமாகச் சைகை செய்ய தமிம் இக்பால் அவரை சமாதானப்படுத்தினார்.

எனினும் மைதானத்திலிருந்து வெளியேறிய பங்களாதேஷ் வீரர்கள் உடைமாற்றும் அறையின் கண்ணாடிகளை உடைத்து, அங்குள்ள உடைமைகளை சேதப்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கோபத்தினால் பங்களாதேஷ் வீரர்கள் இவ்வாறு உடமைகளை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், பங்களாதேஷ; வீரர்களினால் சேதமாக்கப்பட்ட உடமைகளுக்கான பணத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் தேசிய அணி வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் 2017/2018…

அதுமாத்திரமின்றி, அண்மையில் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, முத்தரப்பு ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருந்ததுடன், குறித்த போட்டியின் போது பங்களாதேஷ் வீரர்கள் நாகப் பாம்பு படமெடுக்கும் அபிநய நடனத்தை ஆடி இலங்கை வீரர்களை கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த நடனத்தை இலங்கையிலும் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் வீரர்கள், ஆவேசத்துடன், பகைமையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமையை காணமுடிந்ததுடன், நேற்று போட்டியை பார்வையிட வந்த இரு நாட்டு ரசிகர்களுக்கும் இடையில் கலகலப்பு ஏற்படுவதற்கான காரணமாகவும் இது அமைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பங்களாதேஷ் அணி வீரர்களின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களை மாத்திரமல்லாது முழு உலகத்தையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. மொத்தத்தில் தெரு கிரிக்கெட்டில் நடக்கும் சண்டை போன்றுதான் இந்த சம்பவங்கள் பிரதிபலித்திருந்ததுடன், கனவான்களின் விளையாட்டான கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

இந்த சம்பவம் குறித்து பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் போட்டியின் பிறகு கருத்து வெளியிடுகையில், ”கடைசி கட்டத்தில் உணர்ச்சி வசமாகிவிட்டது. நோ -போல் குறித்து கவனத்துக்கு கொண்டு சென்றோம். இந்த சம்பவத்தை வைத்து வேறு எதையும் தவறாக உருவாக்கும் எண்ணம் இல்லை. வெற்றிக்கு பிறகு எங்கள் கோபம் இல்லாமல் போய்விட்டது” என்றார்.

இதேநேரம் அணித்தலைவர் சகிப் அல் ஹசன் கூறும்போது, ”அதிக உற்சாகமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இந்தப் போட்டி அமைந்துவிட்டது. இலங்கைக்கும், எங்களுக்கும் மைதானத்தில் ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனால் களத்துக்கு வெளியே நாங்கள் நண்பர்கள். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டோம். ஒரு தலைவராக நான் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த போட்டிகளில் கவனமாக இருப்பேன்” என்றார்.

எனினும், இவ்வாறான சம்பவங்கள் அனைத்தும் அரங்கேறிய பிறகு போட்டி மத்தியஸ்தரின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.சி.சியினால் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நடுவர்களின் தீர்ப்பை மதிக்காமல் வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட பங்களாதேஷ் அணித்தலைவர் சகிப் அல் ஹசனுக்கு ஐ.சி.சி கடுமையான தண்டணை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், ஐ.சி.சி தனது இறுதி முடிவை இன்று அறிவிக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.