Published : 08 Dec 2015 02:51 PM
Last Updated : 08 Dec 2015 02:51 PM

அறிவை விட முக்கியமானது கற்பனைத்திறனே

எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்குவதற்கும் எண்ணப் பரிசோதனைதான் ஐன்ஸ்டைனுக்குப் பாதையமைத்தது. ‘‘அலுவலகத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு நபர் தங்குதடையில்லாமல் மேலிருந்து கீழே விழுந்துகொண்டிருந்தால் அவர் தனது உடல் எடையை உணரவே மாட்டார்’’ என்று ஐன்ஸ்டைனுக்குத் தோன்றியது. ‘‘என் வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோஷமான எண்ணம் அது’’ என்று அவர் அதை நினைவுகூர்ந்துள்ளார்.

ஈர்ப்பும் முடுக்கமும்

ஜன்னல்கள் இல்லாததும் தங்குதடையில்லாமல் விழுவதற்கானதுமான மிக மிக உயரமான கொள்கலன் போன்ற அறை ஒன்றில் ஒரு நபர் மேலிருந்து கீழே விழுந்துகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் தரையில் போய் மோதிச் சிதறும் தருணம் வரும் வரையில் கீழே விழுந்துகொண்டிருக்கும் உணர்வு அவருக்கு ஏற்படவே ஏற்படாது என்று ஐன்ஸ்டைனுக்குத் தோன்றியது. அதற்குப் பதிலாக, ஈர்ப்புவிசையே இல்லாத அண்டவெளியின் ஏதோ ஒரு இடத்தில் ஒரு அறையில் மிதந்துகொண்டிருக்கும் உணர்வு அவருக்கு ஏற்படக் கூடும். தன் உடல் எடையற்று இருப்பதாக அவர் உணர்வார், தனது சட்டைப் பையிலிருந்து எடுக்க முயன்று அவர் தவற விடும் பொருள் கூட அவருக்கு இணையாக அவரோடு தங்குதடையில்லாமல் மிதக்கும்.

அடுத்தது, இதற்கு நேரெதிரான ஒரு கோணத்தில் ஐன்ஸ்டைன் பார்த்தார். அண்டவெளியில் ஈர்ப்புவிசையை உணர முடியாத ஒரு இடத்தில் மிதக்கும், மூடப்பட்ட அறையொன்றில் அந்த மனிதர் மிதந்துகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த அறைக்கு மேலாக இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலி மேல்நோக்கி இழுக்கப்படுகிறது என்றும் வைத்துக்கொள்வோம். மேல்நோக்கி இழுக்கப்படும் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்போது அந்த அறைக்குள் இருக்கும் நபர் தானும், அந்த அறையும் இருப்பது அதிக அளவில் ஈர்ப்புவிசையைக் கொண்டிருக்கும் ஒரு இடத்தில்தான் என்ற முடிவுக்கு வருவார்.

ஈர்ப்புவிசையால் உருவாகும் விளைவுகளும் முடுக்கத்தால் உருவாகும் விளைவுகளும் சமம் என்ற கருதுகோளை இப்படியாக ஐன்ஸ்டைன் முன்வைத்தார். அப்படியென்றால் இரண்டுக்கும் ஒரே காரணம் இருந்தாக வேண்டும். “ஈர்ப்பு விசையின் விளைவுகள் என்றும் முடுக்கத்தின் விளைவுகள் என்றும் நாம் முன்வைப்பவையெல்லாம் ஒரே அமைப்பின் விளைவுகள்தான்,” என்ற முடிவுக்கு ஐன்ஸ்டைன் வந்தார்.

பருப்பொருளும் வளைந்த வெளியும்

இடமும் காலமும் தனித்த விஷயங்கள் அல்ல; மாறாக, ஒன்றாகப் பிணைந்தபடி ‘கால-வெளி’ (Space-time) என்ற கம்பளத்தை உருவாக்குபவை அவை என்று தனது சிறப்பு சார்பியல் கோட்பாட்டில் அவர் முன்பே காட்டியிருந்தார். இப்போது, அந்தக் கோட்பாட்டின் பொதுவடிவமான ‘பொதுச் சார்பியல்’ கோட்பாட்டில் அந்தக் ‘கால-வெளி’ கம்பளம் என்பது பொருட்களை வைத்திருக்கும் வெறும் கலனாக மட்டும் இல்லை. மாறாக, இரண்டு விதமான பரிமாணங்களைக் கொண்டதாக அது இருக்கிறது: நகர்ந்துகொண்டிருக்கும் பொருட்கள் அந்தக் கம்பளத்தை வளைக்கின்றன, அடுத்ததாக, அந்தக் கம்பளத்தின் வளைவுகள் பொருட்கள் எப்படி நகர வேண்டும் என்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன.

மற்றுமொரு ‘எண்ணப் பரிசோதனை’யைக் கொண்டு இதை நாம் மனக்கண்ணில் பார்க்கலாம்: ஒரு மெத்தை மேல் கனமான இரும்புக் குண்டை உருட்டிவிடுவதாகக் கற்பனை செய்துபாருங்கள். அந்தக் குண்டு, மெத்தையில் வளைவை, அதாவது பள்ளத்தை, ஏற்படுத்தும். அடுத்ததாக அந்த மெத்தையில் சிறுசிறு பந்துகளை உருட்டிவிடுங்கள். அந்தப் பந்துகள் எல்லாம் இரும்புக் குண்டை நோக்கித்தான் ஓடும். அந்த இரும்புக் குண்டு ஏதோ மர்மமான விசை ஒன்றைக் கொண்டு பந்துகளை ஈர்த்துவிடவில்லை. அந்த இரும்புக் குண்டால் மெத்தை நடுவில் பள்ளமாக ஆகியிருப்பதால்தான் அதை நோக்கி பந்துகள் ஓடுகின்றன. இதே விஷயத்தை நான்கு பரிமாணங்களைக் கொண்ட கால-வெளிக் கம்பளத்துக்கும் கற்பனை செய்துபார்க்க ஐன்ஸ்டைனால் முடிந்திருக்கிறது. அப்படிச் சிந்தித்துப் பார்ப்பதென்பது நமக்கெல்லாம் சிரமமான விஷயம்தான், அதனால்தான் அவர் ஐன்ஸ்டைனாக இருந்தார், நாம் நாமாக இருக்கிறோம்.

1915-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் தொடர்ந்து நான்கு வியாழக்கிழமைகளில் பெர்லினில் இருந்த ‘அறிவியல் துறைகளுக்கான பிரஸ்ஸிய அகாடெமி’யில் தனது பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைத்தார். நவம்பர் 25 அன்று தனது கடைசி உரையில் தனது சமன்பாடுகளை முன்வைத்தார். அதில் ஒன்றுதான் இது:

கால-வெளியின் வடிவத்தைப் பொருட்கள் எப்படி வளைக்கின்றன என்பதைச் சமன்பாட்டின் இடதுபுறமுள்ள பகுதி சொல்கிறது. வளைக்கப்பட்ட இந்த இடம் எப்படி பொருட்களின் இயங்குதிசையைத் தீர்மானிக்கிறது என்பதை மேற்கண்ட சமன்பாட்டின் வலதுபுறமுள்ள பகுதி சொல்கிறது. இயற்பியலாளர் ஜான் வீலர் இதை அழகாகச் சொல்வார்: “எப்படி வளைய வேண்டும் எனபதைக் கால-வெளியிடம் பருப்பொருள் (matter) சொல்கிறது, பருப்பொருள் எப்படிப் பயணிக்க வேண்டுமென்பதை வளைந்த வெளி சொல்கிறது.”

இதன் அடிப்படையில் பார்த்தால் இன்னொரு விளைவாக ஈர்ப்பு விசை என்பது ஒளியை வளைத்தாக வேண்டும். இதையும் மற்றுமொரு எண்ணப் பரிசோதனையின் மூலமாக ஐன்ஸ்டைன் காட்டுகிறார். மேல்நோக்கி ஒரு அறை இழுக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இழுக்கப்படும் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதன் ஒரு சுவரிலுள்ள சிறு துளை வழியாக ஒரு லேசர் ஒளிக்கற்றை வருகிறது.

மறுமுனையில் உள்ள சுவரை அந்த ஒளிக்கற்றை தொடும்போது அது தரைக்கு அருகில் உள்ள சுவர்ப் பரப்பாக இருக்கும், அறை மேல்நோக்கி ஏற்கெனவே போய்விட்டிருக்கிறதல்லவா! இப்போது ஒளி பயணித்திருக்கக் கூடிய தடத்தை வரைந்து பார்த்தீர்கள் என்றால் அதன் தடம் வளைந்திருப்பது போல் தோன்றும். அதிகரிக்கும் வேகத்துடன் மேல்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அறைக்குக் குறுக்காக ஒளி கடந்ததால் நமக்கு அப்படித் தோன்றுகிறது. பொதுச்சார்பியல் கோட்பாட்டின்படி ஈர்ப்பு விசையின் விளைவும் முடுக்கத்தின் விளைவும் சமமாகவே இருக்கும். ஆதலால், ஈர்ப்புவிசை கொண்ட ஒரு புலத்தின் ஊடாகச் செல்லும் ஒளி வளைந்தாக வேண்டும்.

அறிவை விட முக்கியமாய்..

இந்தக் கோட்பாட்டை நிரூபிப்பதற்கு அறிவியலாளர்களுக்கு நான்கு ஆண்டுகள் ஆயின. 1919, மே மாதத்தில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது பிரிட்டிஷ் வானியலாளர் ஆர்தர் எடிங்டன் தலைமையிலான குழு ஒன்றுதான் இதை நிரூபித்தது. சூரியனுக்குப் பின்னாலிருந்து வரும் நட்சத்திரத்தின் ஒளி சூரியனின் ஈர்ப்புவிசையைத் தாண்டி வரும்போது எந்த அளவுக்கு வளைகிறது என்பதை அவர்களால் அளவிட முடிந்தது. அந்த அளவுகள் ஐன்ஸ்டைன் கோட்பாட்டை உறுதிப்படுத்தின.

இதைப் பற்றி ஐன்ஸ்டைனுக்குத் தந்தி கொடுக்கப்பட்டது. அதை தனது மாணவி ஒருவரிடம் ஐன்ஸ்டைன் காட்டியிருக்கிறார். “இந்தக் கோட்பாடு தவறு என்று அந்த ஆய்வுகள் கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?” என்று அந்த மாணவி அவரிடம் கேட்டாள். “அப்படியென்றால் கடவுளுக்காக நான் வருத்தப்பட்டிருப்பேன். ஏனென்றால், இந்தக் கோட்பாடு அவ்வளவு உண்மையானது” என்று பதிலளித்திருக்கிறார்.

“நீங்கள் இவ்வளவு பிரபலமாக இருக்கக் காரணம் என்ன?” என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு ஐன்ஸ்டைனின் இளைய மகன் எதுவார்து அவரிடம் கேட்டான். கால-வெளிக் கம்பளத்தின் வளைவுதான் ஈர்ப்புவிசை என்ற தனது தரிசனத்தைத் தனது மகனுக்கு விளங்கவைக்கும் வகையில் ஒரு எண்ணப் பரிசோதனையையே அவனுக்கும் பதிலாக ஐன்ஸ்டைன் கொடுத்தார். “வளைந்த கிளையொன்றின்மீது பார்வையற்ற வண்டு ஒன்று ஊர்ந்துசெல்கிறது. தான் கடந்துவந்த பரப்பு உண்மையில் வளைவான பரப்பு என்பதை அது கவனிக்கவில்லை. அந்த வண்டு கவனிக்கத் தவறியதை அதிர்ஷ்டவசமாக நான் கவனித்துவிட்டேன்” என்று ஐன்ஸ்டைன் சொல்லியிருக்கிறார்.

பார்வையற்ற வண்டு கவனிக்கத் தவறியதைக் கவனித்தது மட்டுமல்ல ஐன்ஸ்டைன் செய்தது, எண்ணப் பரிசோதனைகளின் மூலம் அதைக் கற்பனை செய்துபார்க்கவும் அவரால் முடிந்திருக்கிறது. பார்க்க முடியாததையெல்லாம் மனக்கண்ணில் காட்சியாகப் பார்க்கக் கூடிய திறன்தான் படைப்பாக்க இயல்பு பொருந்திய மேதைகளுக்கு அத்தியாவசியமானது. ஐன்ஸ்டைனே சொல்லியிருப்பதைப் போல, “அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறனே.”

- வால்ட்டர் ஐஸாக்ஸன். ஐன்ஸ்டைன், ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளிட்டோரின் வரலாற்று நூல்களின் ஆசிரியர்.

நியூயார்க் டைம்ஸ், சுருக்கமாகத் தமிழில்: ஆசை ஐன்ஸ்டைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x